கல்முனை பகுதியில் பதற்ற நிலை ; போக்குவரத்து பாதிப்பு !
( வி.ரி. சகாதேவராஜா)
கல்முனை வடக்கு பிரதேச செயலக விடயங்களுக்கு உடனடி தீர்வினை பெற்றுத்தருமாறு கோரி இன்று திங்கட்கிழமை (24) ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளமையினால் மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியின் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதுடன் பதற்ற நிலை தொடர்ந்தது.
அத்துடன், பிரதேச செயலகத்தின் நுழைவாயிலையும் பூட்டிய நிலையில் அதிகாரிகளை உள்நுழைய விடாமல் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம்பெறும் நிர்வாக அடக்குமுறைகளை கண்டித்தும் அதற்கான உரிய தீர்வு கோரியும் தொடர்ச்சியாக 92 நாட்களாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் இன்று பாரிய ஆர்ப்பாட்டம் இடம்பெறுகின்றது.
இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக மட்டக்களப்பு – கல்முனை வீதி தடைப்பட்டுள்ளதால் வாகனங்களை மாற்று வீதிகளில் அனுப்புவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்திருந்தனர்.
இதே வேளை 7 மணித்தியாலங்களாக கல்முனை நகர் போராட்டக்காரர் வசம் இருந்த நிலையில் கல்முனையில் வீதி மறியல் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களிடையே கலந்துரையாடல் ஒன்று இடம்பெற அதிகாரிகளினால் ஏற்பாடு செய்யப்பட்டது.
காலை 8.00 மணிமுதல் பி.ப 2 மணி வரை கல்முனை மாநகரம் ஸ்தம்பித்திருந்ததுடன், நகரில் இருந்து அனைத்து பொது போக்குவரத்துக்களும் தடைப்பட்டிருந்தது. மருத்துவ சேவை வாகனங்கள் மாத்திரம் மக்களால் அனுமதிக்கப்பட்டிருந்தன.
அத்துடன், தமது நியாயமான கோரிக்கைக்கு பதில் என்ன? என பல கோஷத்துடன் வீதியில் அமர்ந்தும் போராட்டம் செய்தனர்.பின்னர் மாவட்ட அரசாங்க அதிபர் பொலிஸாரின் மத்தியஸ்த்துடன் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் கேட்டுக்கொண்டதற்கிணங்க சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் எட்டுப் பேர் மாவட்ட செயலகத்துக்கு பேச்சுவார்த்தைக்கு சென்றுள்ளனர்.
அதுவரை வீதி மறியல் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் வழமை போன்று கல்முனை வடக்கு பிரதேச செயலகம் முன்பாக சுழச்சிமுறை போராட்டம் தொடர்கிறமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை வழமைக்கு மாறாக இன்று பாரிய விமானம் ஒன்று பெரும் இரைச்சலுடன் ஆகாயத்தில் வட்டமடித்த வண்ணம் இருந்ததையும் காண முடிந்தது.
, கல்முனை பகுதியில் பதற்ற நிலை ; போக்குவரத்து பாதிப்பு !