வர்த்தகருக்கு போலி மாணிக்கக்கல்லை விற்ற இருவர் கைது !

ஆனமடுவ நகரத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவருக்கு போலி மாணிக்கக்கல்லை விற்பனை செய்த இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக ஆனமடுவ பொலிஸார் தெரிவித்தனர்.
கைதானவர்கள் ஆனமடுவ பரமகந்த பகுதியைச் சேர்ந்த 34 மற்றும் 38 வயதுடையவர்கள் எனவும் இவர்கள் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர் .
சந்தேக நபர்கள் இருவரும் கடந்த ஏப்ரல் மாதம் வர்த்தகர் ஒருவருக்கு தொலைபேசி அழைப்பு விடுத்து ஒரு கோடி ரூபா பெறுமதியான மாணிக்கக்கல் இருப்பதாகவும், அதனைப் பெற்றுக்கொள்ளப் பணத்துடன் ஆனமடுவ நகரத்துக்கு வருமாறும் கூறியுள்ளனர் .
பின்னர், இந்த வர்த்தகர் மாணிக்கக்கல்லைக் கொள்வனவு செய்வதற்காக ஆனமடுவ நகரத்துக்கு சென்ற போது சந்தேக நபர்கள் இருவரும் வர்த்தகரிடம் மாணிக்கக் கற்களைக் காண்பித்துவிட்டு அவரிடமிருந்த 10 இலட்சம் ரூபா பணத்தைப் பெற்று கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.
பாதிக்கப்பட்ட வர்த்தகர் இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளிக்காத நிலையில், நீண்ட நாட்களுக்கு பின்னர் அந்த வர்த்தகருக்கு மற்றுமொரு தொலைபேசி அழைப்பு ஒன்றில் மாணிக்கல் இருப்பதாகவும், அதனைப் பெற்றுக்கொள்ளப் பணத்துடன் வருமாறும் கூறப்பட்டுள்ளது.
பின்னர், இந்த வர்த்தகர் இந்த சம்பவம் தொடர்பில் ஆனமடுவ பொலிஸாருக்கு முறைப்பாடு வழங்கியதன் அடிப்படையில் சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
, வர்த்தகருக்கு போலி மாணிக்கக்கல்லை விற்ற இருவர் கைது !