Tuesday, July 23, 2024
LANKA FIRE🔥 FM Live
HomeSrilanka Local NewsOther Local Newsநெருக்கடியை கண்டு ஓடிப்போகும் தலைவர்களால் நாட்டுக்கு நன்மை கிடைக்கும் என எதிர்பார்க்க முடியாது : ஜனாதிபதி!

நெருக்கடியை கண்டு ஓடிப்போகும் தலைவர்களால் நாட்டுக்கு நன்மை கிடைக்கும் என எதிர்பார்க்க முடியாது : ஜனாதிபதி!

நாட்டின் நெருக்கடியை கண்டு ஓடிப்போகும் தலைவர்களிடமிருந்து நாட்டுக்கு நன்மையை எதிர்பார்க்க முடியாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

நாடு அராஜகமாக இருந்த போது தான் நாட்டின் தலைமைப் பொறுப்பை ஏற்றிருக்காவிட்டால், இன்று நாட்டின் நிலைமையை நினைத்துப் பார்க்க முடியாது எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

மட்டக்களப்பு மாநகர சபை கேட்போர் கூடத்தில் நேற்று (22) நடைபெற்ற மட்டக்களப்பு மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிநிதிகளுடனான சந்திப்பிலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்தார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

“மட்டக்களப்பில் அரசியல் மற்றும் பொது அமைப்புகளைச் சேர்ந்த பலரைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இன்று நாடு மிகவும் கடினமான நிலையில் உள்ளது. கடந்த ஆட்சியின் போது, ​​இந்த நாட்டின் பொருளாதாரத்தை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு, குறைந்தபட்சம் மூன்று பில்லியன் டொலர்களை கையிருப்பில் வைத்திருக்க வேண்டும் என்பதை கூறியிருந்தேன். அன்று எந்த அரசியல் கட்சியும் அந்த உண்மையை சொல்லவில்லை. ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள், மக்கள் விடுதலை முன்னணியினர் இது பற்றி என்ன சொன்னார்கள்?. நாங்கள் மட்டுமே நாட்டுக்கு உண்மையைக் கூறியதால், நாங்கள் பொய்ப் பிரச்சாரம் செய்கிறோம் என்று மக்கள் நினைத்தனர். அரசியல் நிலைப்பாடு எவ்வாறானதாக இருந்தாலும், கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் நாட்டின் எதிர்காலத்திற்காக உண்மையைப் பேச வேண்டும். அரசியலில் நாம் எப்போதும் உண்மையையே பேச வேண்டியது கட்டாயமாகும்.

நாட்டில் போராட்டம் வலுவடைந்திருந்த காலத்தில், அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சஜித் பிரேமதாசவிடம் இந்த நாட்டைக் கைப்பற்றுமாறு கோரினார். நாட்டின் எதிர்காலத்தைப் பொறுப்பேற்க அவர்கள் முன்வரவில்லை. இப்போது நாட்டின் ஆட்சி அதிகாரத்தை கோரும் மக்கள் விடுதலை முன்னணி அந்த கோரிக்கையைப் பொருட்படுத்தவே இல்லை. இவ்வாறானவர்களை நாட்டின் தலைவர்களாக்க வேண்டுமா?

எனினும், சவால்களை கண்டு அஞ்சாமல் அதற்கு ஈடுகொடுத்து அரசாங்கத்தையும் அமைத்தோம். தற்போது நாடு வங்குரோத்து நிலையில் இருந்து மீண்டு வருகிறது. ​​சவால்களுக்கு மத்தியில் நாட்டை ஏற்றுக்கொண்ட என்னையும் பதவி விலகுமாறு, வலியுறுத்திய எதிர்க்கட்சிகள் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தன.

அந்த நேரத்தில் பதவி விலகியிருந்தால் நாட்டின் தற்போதைய நிலை என்னவாகியிருக்கும். நாட்டுக்கு மிகவும் நெருக்கடியான நேரத்தில் நான் நாட்டை முன்னோக்கி கொண்டு சென்றேன். இந்நாட்டு மக்களுக்காக வங்குரோத்து நிலையிலிருந்து மீள்வதற்கான பல முயற்சிகளை செய்துள்ளேன்.

நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்த போதும் அரச ஊழியர்களின் கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட்டன. சமூர்த்தி கொடுப்பனவை இரட்டிப்பாக்கி அஸ்வசும திட்டத்தை செயற்படுத்தினோம். காணி உறுதி இல்லாத மக்களுக்கு இலவச உறுதிப் பத்திரம் வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும் 27,000இற்கும் மேற்பட்ட இலவசக் காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கப்படவுள்ளன. அவற்றை இரண்டு மாதங்களுக்குள் வழங்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளேன்.

வங்குரோத்து நிலையில் இருக்கும் போது இவற்றை செய்ய முடிந்ததால், அதிலிருந்து மீண்டு வந்த பின்னர் நாட்டு மக்களுக்கு இன்னும் அதிகமான நன்மைகளைச் செய்ய முடியும். அதற்காக நாம் அனைவரும் ஒற்றுமையாக முன்னேற வேண்டிய நேரம் வந்துள்ளது.” என்று ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார, ஐக்கிய தேசியக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் கே. மோகன், ஐக்கிய தேசியக் கட்சியின் ஏறாவூர் அமைப்பாளர் எம். ஏ. எம். பிலால், ஐக்கிய தேசியக் கட்சியின் மட்டக்களப்பு பிராந்திய அமைப்பாளர் எம். ஏ. நசார், ஐக்கிய தேசியக் கட்சியின் உள்ளூராட்சி மன்ற முன்னாள் உறுப்பினர்கள், பிரதேச அமைப்பாளர்கள், கட்சியின் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

, நெருக்கடியை கண்டு ஓடிப்போகும் தலைவர்களால் நாட்டுக்கு நன்மை கிடைக்கும் என எதிர்பார்க்க முடியாது : ஜனாதிபதி!

தொடர்புடைய செய்திகள்

இன்றைய விளம்பரங்கள்

------------------------------------------- ------------------------------------------- ------------------------------------------- ------------------------------------------- ------------------------------------------- -------------------------------------------

அதிக பார்வைகள்