ஜனாதிபதி என்ற வகையில் இந்த நாட்டில் எந்த ஒரு பிள்ளையும் பாதிக்கப்படக் கூடாது என தீர்மானித்துள்ளதாகவும், இரண்டு வருட குறுகிய காலத்தில் பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்பதற்காக தன்னை அர்ப்பணித்துள்ளதாகவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
ஜனாதிபதி புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு இன்று அலரி மாளிகையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.
மக்களுக்கு வருமானம் வழங்குவதற்காக ‘அஸ்வெசும’ வேலைத்திட்டமும் காணி உரிமையை வழங்க உறுமய வேலைத்திட்டமும் அமுல்படுத்தப்பட்டதாக தெரிவித்த ஜனாதிபதி, பிள்ளைகளுக்கு கல்விஅறிவை வழங்குவதற்காக ‘ஜனாதிபதி கல்வி புலமைப் பரிசில் திட்டம்’ ஆரம்பிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.
2022 ஆம் ஆண்டில் (2023), உயர் தரம் கற்கும் 60 மாணவர்களைத் தெரிவு செய்து 100 வலயங்கள் உள்ளடங்கும் வகையில் ஒரு மாணவருக்கு மாதாந்தம் 6 000 ரூபா வீதம் 6000 மாணவர்களுக்கு 02 வருடங்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கருத்திட்டத்திற்கு அமைய, நாடளாவிய ரீதியில் 10,126 பாடசாலைகளை உள்ளடக்கி தரம் 1 முதல் தரம் 11 வரை கல்வி கற்கும் மாணவர்களுக்கு இந்த புலமைப்பரிசில் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
ஒவ்வொரு பாடசாலையிலும் கல்வி கற்கும் மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் ஒவ்வொரு பாடசாலைக்கும் வழங்கப்படும் புலமைப்பரிசில் தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு பாடசாலைக்கு வழங்கப்படும் குறைந்தபட்ச புலமைப்பரிசில் 04 என்பதோடு அதிகபட்ச புலமைப்பரிசில் 22 ஆகும். ஏப்ரல் 2024 முதல் 12 மாதங்கள் வரை, ஒரு மாணவருக்கு மாதம் ரூ.3000/- வீதம் ஒரு இலட்சம் மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியிலிருந்து கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.
புலமைப் பரிசில்கள் வழங்கும் திட்டத்தை அடையாளப்படுத்தும் வகையில் இன்று 5108 மாணவர்களுக்கு புலமைப்பரிசில்கள் மற்றும் பரிசில்கள் வழங்கப்பட்டன.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சில மாணவர்களுக்கு அடையாளமாக புலமைப் பரிசில்களை வழங்கினார்.
புலமைப்பரிசில் பெற்ற மாணவர்கள் இருக்கும் இடத்திற்குச் சென்ற ஜனாதிபதி அவர்களின் விபரங்களைக் கேட்டறிந்தார்.
இந்நிகழ்வில், உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் கூறியதாவது,
”இந்நாட்டுப் பிள்ளைகளுக்கு இன்று மிகவும் மகிழ்ச்சியான நாள். முதலில், இந்த உதவித்தொகை பெறுவதற்கு உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இத்திட்டத்தின் கீழ் ஒரு இலட்சம் உதவித்தொகை வழங்கப்படும். உயர்தரம் கற்கும் மாணவர்களுக்கு 6,000 ரூபாய் உதவித்தொகையும் வழங்கப்படுகிறது. இந்த புலமைப்பரிசில்களை வழங்க ஜனாதிபதி நிதியத்தில் இருந்து 04 பில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளோம்.
கடந்த 3 வருடங்கள் நம் அனைவருக்கும் கடினமான காலமாக அமைந்தது. நாங்கள் அனைவரும் அவதிப்பட்டோம். உணவு இருக்கவில்லை. மாணவர்களுக்கு பாடசாலைக்குச் செல்வதற்குப் போக்குவரத்து வசதி இருக்கவில்லை. இப்போது அந்த நிலைமை இல்லை. ஜனாதிபதி என்ற வகையில் இந்த நாட்டின் பிள்ளைகள் துன்பப்படுவதற்கு இடமளிக்காதிருக்க தீர்மானித்தேன். அதன்படி இந்த நாட்டை பொருளாதார ரீதியாக மீட்பதற்குத் தேவையான வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.
நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து விடுவிக்க தேவையான திட்டத்தை செயல்படுத்தியுள்ளோம். அதன் மூலம் அடுத்த 5-10 ஆண்டுகளில் பிள்ளைகளுக்கான சிறந்த நாட்டை உருவாக்குவதே எங்கள் நோக்கமாகும்.
கடந்த பொருளாதார நெருக்கடியால், பலர் தங்கள் வருமான வழிகளை இழந்துள்ளனர். அதன்படி, அஸ்வெசும திட்டத்தின் மூலம் 24 இலட்சம் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க ஏற்பாடு செய்துள்ளோம். அத்துடன், மக்கள் வாழும் காணியின் சட்டப்பூர்வ உரிமையை மக்களுக்கு வழங்க உறுமய வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. மேலும், நகர்ப்புற அடுக்குமாடி குடியிருப்புகளில் வசித்த மக்களுக்கு அந்த வீட்டின் உரிமை இருக்கவில்லை. எனவே, அரச காணியில் வசித்த, அரசுக்குச் சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்த, அரச அடுக்குமாடி குடியிருப்புகளில் வசித்த அனைவருக்கும் அதற்கான உரிமை வழங்கப்படுகிறது. மேலும், நாட்டின் பிள்ளைகளின் கல்வியில் கவனம் செலுத்தி, உங்கள் அனைவருக்கும் இந்த உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, மக்களுக்கு வருமானம் அளிக்கவும், உரிமைகளை வழங்கவும் பிள்ளைகளுக்கு கல்வி வழங்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். எனவே இப்பிள்ளைகள் இந்த உதவித்தொகையை சரியான முறையில் பயன்படுத்தி தங்கள் கல்வியை மேம்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்” என ஜனாதிபதி தெரிவித்தார்.
பிரதமர் தினேஷ் குணவர்தன, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன, இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன், பாராளுமன்ற உறுப்பினர்களான வஜிர அபேவர்தன, மேஜர் பிரதீப் உடுகொட, மேல்மாகாண ஆளுநர் மார்ஷல் ஓப் எயார் போர்ஸ் ரொஷான் குணதிலக்க, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க, நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன, பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன, ஜனாதிபதி நிதிய செயலாளரும் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளருமான டபிள்யூ.ஏ.சரத் குமார உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
, பிள்ளைகளுக்கு உகந்த நாட்டை உருவாக்குவேன்! ஜனாதிபதி !