பத்தாம் நாள் பதியேற வேண்டும்! காட்டுப் பாதை திறப்பதில் நிரந்தர கொள்கை அவசியம்!! காரைதீவில் கதிர்காம பாதயாத்திரீகர்கள் கோரிக்கை !
(காரைதீவு நிருபர் சகா)
“பத்தாம் நாள் பதியேற வேண்டும்” என்ற முன்னோரின் வாக்குப்படி காட்டுப் பாதை திறப்பதில் நிரந்தர கொள்கை அவசியம்.” இவ்வாறு காரைதீவை வந்தடைந்த சந்நதி- கதிர்காம பாதயாத்திரீகர்கள் கூட்டாக கோரிக்கை விடுத்தனர்.
யாழ்ப்பாணம் செல்வச் சந்நிதி ஆலயத்திலிருந்து கடந்த மாதம் 11 ஆம் தேதி புறப்பட்ட யாழ் கதிர்காம பாதயாத்திரை குழுவினருக்கு நேற்றுமுன்தினம் காரைதீவில் மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டது. அத்தருணத்தில் இக் கோரிக்கை விடுக்கப்பட்டது.
பாதயாத்திரீகர்கள் கல்முனையில் இருந்து 36வது நாளில் காரைதீவை வந்தடைந்த போது அங்கு காரைதீவு பிரதேச சபை முன்னாள் தவிசாளர் கே.ஜெயசிறில், யாத்திரை ஆலோசகர் சமய ஆர்வலர் வி.ரி.சகாதேவராஜா, மாவட்ட இந்து கலாசார உத்தியோகத்தர் கு.ஜெயராஜீ, முருக பக்தர் தேவதாஸ் ஆகியோர் அவர்களை வரவேற்று அவர்களது பாதங்களை கழுவி நமஸ்காரம் செய்து வரவேற்றனர்.
பாதயாத்திரைக்கு தலைமை தாங்கி வந்த ஜெயாவேல்சாமி வேலுக்கும் அடியார்களுக்கும் தீப ஆராதனை செய்தார் . யாத்திரை ஆலோசகர் வி.ரி.சகாதேவராஜா சிறப்புரையை நிகழ்த்தினார். முன்னாள் தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் ” காட்டுப் பாதை திறப்பு” தொடர்பாக உரையாற்றினார்.
முருக பக்தர் தேவதாஸ் குடும்பத்தினர் அடியார்களுக்கு நீராகாரம் வழங்கினார்.
தொடர்ந்து, பாதயாத்திரை அடியார்கள் ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயத்திற்கு சென்று விசேட பூஜையில் கலந்து கொண்டார்கள் .
நேற்று(17) திங்கட்கிழமை காலை சித்தானைக்குட்டி மடாலயத்திற்கு அவர்கள் விஜயம் செய்தனர்.
இன்று செவ்வாய்க்கிழமை பாதயாத்தீரீகர்கள் மடத்தடி மீனாட்சியம்மன் ஆலயத்தை தரிசித்து பின்னர் அக்கரைப்பற்றை சென்றடைய இருக்கின்றார்கள்.
, பத்தாம் நாள் பதியேற வேண்டும்! காட்டுப் பாதை திறப்பதில் நிரந்தர கொள்கை அவசியம்!! காரைதீவில் கதிர்காம பாதயாத்திரீகர்கள் கோரிக்கை !