பாடசாலையில் ஆசிரியர்களின்றி பௌதீக விஞ்ஞான பிரிவில் 3 A சித்திகள் l இறக்குவானை பரியோவான் தேசிய கல்லூரி மாணவர்கள் சாதனை !!

இரத்தினபுரி மாவட்டத்தில் ஆசிரியர்கள் இன்றி, பௌதீக விஞ்ஞான பிரிவில் இரு மாணவர்கள் மூன்று A சித்திகளை பெற்று சாதனை படைத்த வரலாற்றை, இறக்குவானை பரியோவான் தமிழ் தேசிய கல்லூரி படைத்துள்ளது.
137 வருட வரலாற்றை கொண்ட இறக்குவானை பரியோவான் தமிழ் தேசிய கல்லூரியில், 30 வருட காலமாக கணித மற்றும் விஞ்ஞான பிரிவுகள் இயங்கி வருகின்றன.
எனினும், இந்த 30 வருட காலத்தில் பாடசாலையில், கணித மற்றும் விஞ்ஞான ஆசிரியர்களுக்கான நியமனங்கள் கிடைக்கவில்லை.
இந்த நிலையில், இறக்குவானை உள்ளிட்ட இரத்தினபுரி மாவட்ட மாணவர்கள், கணித, விஞ்ஞான துறைகளில் தமது கனவுகளை நிறைவேற்றிக் கொள்ள நுவரெலியா மாவட்டத்தின் ஹட்டன் கல்வி வலயத்திற்கு சென்று ஒரு காலக்கட்டத்தில் கல்வி பயின்றார்கள்.
எனினும், வெளிமாவட்ட மாணவர்களுக்கு நுவரெலிய மாவட்டத்தில் கல்வி பயில ஒரு சந்தர்ப்பத்தில் தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து, இரத்தினபுரி மாவட்ட மாணவர்களுக்கான கனவு பறிக்கப்பட்டது.
இந்த நிலையில், இறக்குவானை மாணவர்கள் பல தசாப்த காலமாக தமது கனவுகளை நிறைவேற்றிக் கொள்ள முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு, அந்த கனவுகளுடன் பயணித்த பலர் இன்று வேறு துறைகளை நோக்கி நகர்ந்துள்ளனர்.
இவ்வாறான பின்னணியில், இறக்குவானை பரியோவான் பாடசாலை, அதிபர் உள்ளிட்ட பாடசாலை சமூகத்தின் முயற்சியுடன் 2022ம் ஆண்டு தேசிய கல்லூரியாக தரமுயர்ந்தது.
விஞ்ஞான, கணித பாடங்களுடன் ஆசிரியர் நியமனங்களின்றி, மாகாண கல்வி கட்டமைப்பிற்கு கீழ், 30 வருட காலமாக பரியோவான் பாடசாலை இயங்கியதுடன், 2022ம் ஆண்டு முதல் இந்த பாடசாலை மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது.
இரத்தினபுரி மாவட்டம் மாத்திரமின்றி, சபரகமுவ மாகாணத்திலுள்ள ஒரேயொரு தமிழ் தேசிய கல்லூரி என்ற பெருமையை இறக்குவானை தமிழ் தேசிய கல்லூரி கொண்டுள்ளது.
சபரகமுவ மாகாணத்தில் மூன்று தமிழ் மொழி தேசிய கல்லூரிகள் காணப்படுகின்ற போதிலும், இறக்குவானை பரியோவான் தேசிய கல்லூரியை தவிர்ந்த ஏனைய இரு பாடசாலைகளும் முஸ்லிம் பாடசாலைகளாகும்.
இந்த நிலையில், இந்த மாகாணத்திற்கான ஒரேயொரு தமிழ் தேசிய கல்லூரியில் கணித மற்றும் விஞ்ஞான உயர்தர பாடங்கள் இருந்த போதிலும், ஆசிரியர் இல்லாமை காரணமாக இன்றும் இயக்க முடியாத சூழ்நிலையை அதிபர், ஆசிரியர்கள் உள்ளிட்ட பாடசாலை சமூகம் எதிர்நோக்கி வருகின்றது.
எனினும், பாடசாலை சமூகத்தின் விடா முயற்சியானது, இரண்டு மாணவர்களை பௌதீக விஞ்ஞான பிரிவில் இன்று சாதனையாளராக்கியுள்ளது.
பெருந்தோட்ட பகுதியை பிறப்பிடமாகக் கொண்ட பிரேமநாத் சஜிநாத் மற்றும் ராஜேந்திரன் ரொஹான் ஆகிய மாணவர்கள் இம்முறை உயர்தர பௌதீக விஞ்ஞான பிரிவில் மூன்று A சித்திகளை, இறக்குவானை பரியோவான் தமிழ் கல்லூரிக்காக பெற்றுக் கொடுத்துள்ளனர்.
பிரேமநாத் சஜிநாத் மற்றும் ராஜேந்திரன் ரொஹான்
பரியோவான் தேசிய கல்லூரியில், தொண்டர் ஆசிரியர்கள் உள்ளிட்டோரின் ஒத்துழைப்புடன், பௌதீக விஞ்ஞான பிரிவில் தடம் பதித்தனர் பிரேமநாத் சஜிநாத் மற்றும் ராஜேந்திரன் ரொஹான்.
அதனைத் தொடர்ந்து, ஆசிரியர் அசோக் விஜயகுமார் வழிகாட்டுதலிலும்
இவர்களின் ஒத்துழைப்புடன், பிரேமநாத் சஜிநாத் மற்றும் ராஜேந்திரன் ரொஹான் ஆகியோர் இறுதி ஒரு வருடம் யாழ்ப்பாணத்தில் மேலதிக வகுப்புக்களை தொடந்துள்ளனர்.
இறக்குவானை பரியோவான் தமிழ் கல்லூரி, ஸ்டெம் அமைப்பு மற்றும் சிவன் அருள் அமைப்பு ஆகியவற்றின் ஒத்துழைப்புடன், இன்று இந்த மாணவர்கள் மூன்று A சித்திகளை பெற்றுள்ளனர்.
உயர்தர பௌதீக விஞ்ஞான பிரிவிற்கான ஆசிரியர் ஒருவர் கூட பாடசாலையில் இன்றி, தமது முயற்சி மூலதனமாகக் கொண்டு இன்று இந்த மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
கணித மற்றும் விஞ்ஞான பிரிவுகளுக்கான ஆசிரியர்களை தமது பாடசாலைக்கு பெற்றுக் கொடுக்குமாறு கல்வி அமைச்சிடம், பாடசாலையின் அபிவிருத்தி சங்கம் கோரிக்கை விடுக்கின்றது.
, பாடசாலையில் ஆசிரியர்களின்றி பௌதீக விஞ்ஞான பிரிவில் 3 A சித்திகள் l இறக்குவானை பரியோவான் தேசிய கல்லூரி மாணவர்கள் சாதனை !!