ஏனைய பிராந்திய செய்திகள்பிராந்திய செய்திகள்

கடலில் மிதந்து கொண்டிருந்த ஒருதொகை பீடி இலைகள் மீட்பு !

கற்பிட்டி – உச்சிமுனை கடற்பிரதேசத்தில் மிதந்துகொண்டிருந்த நிலையில் ஒருதொகை பீடி இலைகள் நேற்று (30) கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும், இதனுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் இருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கற்பிட்டி பகுதியைச் சேர்ந்த 21 மற்றும் 46 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர் என கடற்படையினர் குறிப்பிட்டனர்.

வடமேற்கு கடற்படை கட்டளையின் உச்சமுனை கடற்படையினர் கற்பிட்டி – உச்சமுனை கடல் பிரதேசத்தில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட போது, அங்கு சந்தேகத்திற்கிடமான இயந்திர படகு ஒன்றினை பரிசோதனை செய்தனர்.

இதன்போது, அந்த இயந்திர படகில் 19 உர மூடைகளில் அடைக்கப்பட்ட 617 கிலோ 600 கிராம் பீடி இலைகள் இருந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இலங்கையின் பல்வேறு பகுதிகளுக்கும் விநியோகிக்கும் நோக்கில் குறித்த பீடி இலைகள், கொண்டுவரப்பட்டிருக்கலாம் என தாம் சந்தேகிப்பதாக கடற்படையினர் குறிப்பிட்டனர்.

இவ்வாறு கடற்படையினரால், கைப்பற்றப்பட்ட 617 கிலோ 600 கிராம் பீடி இலைகள் மற்றும் இயந்திர படகு, கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக வடமேல் மாகாண போதை ஒழிப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் கடற்படையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில மாதங்களில் கற்பிட்டி பிரதேசத்தில் பத்தலங்குண்டு, இப்பந்தீவு, கீரிமுந்தல், மாம்புரி, தேத்தாப்பொல மற்றும் தளுவ உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட பல கோடி ரூபா பெறுமதியான பீடி இலைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கைக்கு சொந்தமான கடல் மற்றும் கரையோர பகுதியில் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் இலங்கை கடற்படையினர் தொடர்ந்தும் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

, கடலில் மிதந்து கொண்டிருந்த ஒருதொகை பீடி இலைகள் மீட்பு !

Back to top button