மட்டக்களப்பில் வைகாசி மாதத்தில் நடக்கும் கதிர்காம யாத்திரையும் கண்ணகி அம்மன் கோயில் சடங்கும் .


மட்டக்களப்பில் வைகாசி மாதத்தில் நடக்கும் கதிர்காம யாத்திரையும் கண்ணகி அம்மன் கோயில் சடங்கும்
——————————————————————-
பண்பாடு மிக வலிமையான ஒன்று. பண்பாட்டை நிர்ணயிப்பதில் ஒரு சமூகத்தின் பொருளியல் அமைப்பும் கருத்தியல் அமைப்பும் பிரதான பங்கு வகிக்கின்றன.
கருத்தியல் அமைப்பிலே ஒன்றுதான் சமயமும் சமயச் சடங்குகளும் சமய நம்பிக்கைகளும் கருத்தியல் என்பது சிறுவயதிலிருந்து நமது ஆழ் மனதில் பதிந்து சூழலால் வளர்வது மாற்றம் பெறுவது.
மட்டக்களப்பு வாழ் தமிழர்களுள் ஒரு சாராரின் கருத்தியலையும் உளவியலையும் வரலாற்றையும் அறிய வேண்டுமானால் அங்கு வருடா வருடம் நடைபெறும் கோயில் சடங்குகளை அறிதல் வேண்டும் அதன் நடைமுறைகளை அறிய வேண்டும்
கோவில் சடங்குகளுக்குள் வரலாறு மறைந்து கிடக்கிறது. பழைய நினைவுகள் புதைந்து கிடக்கின்றன ,பரவசமான கதைகள் உறைந்து கிடக்கின்றன,
பாரம்பரியம் தலைமுறை தலைமுறையாக நினைவில் வைக்கப்படுகிறது
கோயில் சடங்குகளும் வழிபாடுகளும் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டவை அது பற்றி வரும் ஆய்வு ரீதியான கருத்துக்களை மக்கள் பொருட்படுத்துவதில்லை கொண்டாட்டமும் அதனால் வருகின்ற உறவுகளும் அதனால் வருகின்ற உளத் திருப்தியும் அவர்களுக்கு நிம்மதியும் இன்பமும் அளிக்கின்றன.
நிம்மதி அற்ற இந்த உலகில் இதயமற்ற மனிதர்கள் தனித் தனித் தீவுகளாகத தனித்துப்போன இந்த உலகில் விசேடமாக இந்த நவீன உலகில் தாம் இழந்து போன அந்தக் கூட்டு வாழ்வை கொடுத்தும் பெற்றும் வாழ்ந்த அந்த மகிழ்ச்சி வாழ்வை சமத்துவமாக வாழ்ந்த அந்த இன்ப வாழ்வை இச்சடங்குகள் மூலம் பெறுகின்றனர்.
மக்கள் இதயமற்ற இவ்வுலகில் இங்குதான் இதயமாக செயல்படுகிறது சமயம் அதற்குள் இருக்கும் ஏனைய பாதக விடயங்களைக் கணக்கில் இந்த மக்கள் ஒரு போதும் எடுத்துக்கொள்ளார்.
இந்தப் பின்னணியிலே தான், மட்டக்களப்பில் வைகாசி மாதத்தில் நடைபெறும் கதிர்காமக் கந்தனைத் தேடிச் செல்லும் நடை பவனியையும் வைகாசி மாதத்தில் மட்டக்களப்பின் பெரும்பாலான ஊர்களில் நடைபெறுகின்ற கண்ணகி சடங்கையும் சேர்த்துப் பார்க்க வேண்டும்.
தெய்வங்களைப் பெருந்தெய்வம் சிறுதெய்வம் என்று பிரித்தல் தவறானது என்பது பலருடைய அபிப்பிராயம் எனினும் பெருந்தெய்வம் சிறுதெய்வம் என்று பார்க்கும் பண்பும் எங்களிடம் வேரூன்றி விட்டது.
சிறு தெய்வங்களுள் ஒன்றாக கண்ணகி அம்மன் கருதப்பட்டாலும் மட்டக்களப்பின் அடையாள மாகவும் பொதுத் தெய்வமாகவும் கருதப்படும் தெய்வம் கண்ணகி அம்மனாகும்.
மட்டக்களப்பில் கண்ணகி அம்மன் கோவில்கள்
———————————————————————
தெற்கே தம்பிலுவில் தொடக்கம் வடக்கே திருகோணமலை வரை கண்ணகி அம்மன் கோவில்கள் பல கோயில்கள் உள்ளன.
தம்பிலுவில்
காரைதீவு
களுவாஞ்சிக்குடி
செட்டிபாளையம்
புதுக்குடியிருப்பு
ஆரையம்பதி
வந்தாறுமூலை
முதலான கரையோர மார்க்கத்தில் அமைந்த மட்டக்களப்பிலுள்ள கண்ணகி அம்மன் கோயில்களும் கன்னன்குடா போன்ற உட்கிராமங்களில் அமைந்த கோவில்களுமாக ஏறத்தாழ 96 க்கு மேற்பட்ட கண்ணகியம்மன் கோயில்கள் மட்டக்களப்பில் உள்ளன எனச் சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
கண்ணகி அம்மன் விழாக்கள் பாரம்பரியமாக வருடம் தோறும் நடைபெற்றாலும் அண்மைக்காலமாக மீட்டுருவாக்கம் பெற்று அது பல்வேறு புதிய அம்சங்களுடன் மக்கள் மத்தியில் பிரபல்யம் ஆவதையும் அவதானிக்க முடிகிறது.
சடங்கு என்பது போய் இப்போது விழா என்ற பதம் பிரபல்யம் ஆகிவிட்டது இந்த சொல் மாற்றத்தின் பின்னணியில் ஒரு பெரிய பண்பாட்டு மாற்றமும் உள்ளது.
நவீன தொழில் நுட்பம் வேறு வந்து விட்டது முன்னொரு போதும் இல்லாத வகையில் மிக ஆடம்பரமாக அண்மைக்காலமாக கண்ணகி அம்மன் கோவில் சடங்குகள் நடைபெறுவதை அவதானிக்க முடிகிறது.
இதற்கான சமூகவியல், அரசியல், பண்பாட்டு, உளவியல் காரணிகள் உண்டு. அது பற்றி இன்னும் ஆழமான ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை.
செட்டிபாளையம் கண்ணகை அம்மன் கோயில்,ஆரைப்பற்றைக் கண்ணகி அம்மன் கோயில் பற்றி வந்த நூல்கள் முக்கியமான நூல்களாகப் படுகின்றன. ஊரின் வரலாற்றையும் வழிபாட்டு முறைகளையும் விவரமாக கூறுவதாக இவை அமைந்துள்ளன.
செட்டிபாளையம் அம்மன் கோயில் ஆறு ஊரவரை இணைக்கும் கோயிலாக உள்ளது. ஆரைப்பற்றைக் கண்ணகி அம்மன் கோயில் ஆரையம்பதியில் உள்ள சகல மக்களையும் உள்ளீர்ப்பதாக அமைகிறது.
அங்கு நடைபெறுகின்ற கப்பல்காரர் சடங்கு வேறு எந்த கண்ணகி கோவில்களிலும் நடைபெறாத ஒரு சடங்காகும். அதற்கும் அந்த ஊர் வரலாற்றுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு உண்டு.
அது சம்பந்தமான ஒரு சிறந்த நூலை சபாரத்தினமும் பிரசாத்தும் இணைந்து எழுதியுள்ளனர். அதனை மறுகா பிரசுரம் வெளியிட்டுள்ளது. அந்த நூலின் பெயர் ஆரையூர்க் கண்ணகை – வரலாறும் வழிபாடும் அந்நூல் வந்தது 2017 ஆம் ஆண்டில்.
ஆரையம்பதிக் கண்ணகி அம்மன் சடங்கு
————————————————————–
ஆரையம்பதி கண்ணகி அம்மன் சடங்கு அவதானத்திற்குரியது அதற்கான காரணம் சில..
ஒன்று கட்டாடியார் முறையில் இன்றும் அது நடத்தப்படுவது ஆகும். அத்ற்கென ஒரு வரலாறும் அக்கிராமத்தில் உண்டு..
அதற்குள் மட்டக்களப்பு வரலாற்றின் அகற்சியை வேண்டி நிற்கும் பல தகவல்கள் உள்ளன. இவை கல்வெட்டு, எழுத்தாவணம், புதை பொருள்களையே வரலாறு எழுதுவதில் பிரதானமான சான்றுகளாகக் கொள்ளும் நமது மரபுவ்ழி வரலாற்று அறிஞர் கண்களுக்குப் புலனாவதில்லை
இரண்டு அங்கு நடத்தப்படும் பச்சை கட்டுச் சடங்கும், கப்பல்காரச் சடங்கும் .பச்சை கட்டுச் சடங்கில் பச்சையாகக் காய்கள் படைக்கப்படும்.
இதற்கான காரணத்தை நாம் மானிடவியலில் தான் தேட வேண்டும். நெருப்புக் கண்டு பிடிக்கப்படாத காலத்தில் பச்சையாக அனைத்தையும் மனிதர் உண்ட காலத்திற்கு நாம் போக வேண்டும்.
அவ்வகையில் புராதன பண்பாட்டு மானிடவியல் நோக்கில் இதனை அணுக வேண்டும்.
மூன்று ஆரையம்பதிக் கண்ணகி கோவிலுக்குரிய கப்பல் காரச் சடங்கு ஆகும்.
கப்பல்காரச் சடங்கிற்கும் ஆரையம் பதி குடிகளின் வரலாற்றிற்கு மிடையே நிறைய ஒற்றுமைகள் உண்டு.
மட்டக்களப்பில் சில சமூகங்கள் குடிமுறையில் அமைந்துள்ளன. அதனை இன்றும் அவை பேணுகின்றன
ஆரையம்பதியில்தான் குருகுல வம்சம் குடிகளாப் பிரிக்கபப்ட்டுள்ளன.
வங்காளக் குடி
முதலித்தேவன் குடி
வீரமாணிக்கத்தேவன் குடி
ஆறுகாட்டி குடி
சமான்ஓட்டி குடி
முதலாக 16 குடிகளின் பெயர்கள் தெரிய வருகின்றன. இக்குடிகள் பற்றிய ஆய்வு நம்மை மட்டக்களப்பின் வரலாற்றாய்வுக்கு இட்டுசெல்லும்.
நான்கு அக்கோவில் கட்டிட மரபும் வழிபாட்டு மரபும் இன்னும் அக்கோவில் மரபு கோபுரம் ஆகமம் என்ற முறைகளுக்குள் செல்லாமல் இருப்பது செல்வதற்குரிய பொருளாதார சமூக பலமும் பின்னணியும் இருந்தும் போகாமல் இருப்பது.
ஐந்து ஆரையம்பதி மக்கள் அனைவ்ரையும் இணைக்கும் பண்பு கொண்டதாக்வும் அச்சடங்கு முறை இருக்கிறது.
ஆகம முறையிலன்றி முழுமையாக மரபுசார் வழிபாட்டு முறைகளைப் பின் பற்றுவதாக இக்கோவில் வழிபாட்டு முறைகள் அமைந்துள்ளன.
ஆரையம்பதி கிராமத்தில் பல்வேறு சமூகங்கள் இருப்பினும் ஊர் மக்கள் அனைவ்ரும் ஒன்று பட்டுச் சேரும் மையமாக இந்தக் கண்ணகி அம்மன் கோவில் உள்ளது.
கலியாணச் சடங்கிற்காக
பலகாரப் பெட்டிகொடுத்தல்
மடைப் பெட்டிகொடுத்தல்
நேர்த்திக்கடன் வைத்து நிறைவேற்றல்
போன்ற விடயங்களில் அங்கு வாழும் சகல சமூகத்தினரும் இணைகிறாரக்ள் .
கண்ணகி அம்மன் சடங்கும் கதிர்காம யாத்திரையும்
—————————————————————————
கண்ணகி அம்மன் கோயில் சடங்குகள் உள்ளூர் மக்களை இணைக்கும் தன்மை கொண்டனவாயிருக்க கதிர்காமம் செல்லும் நடை யாத்திரை வெளியூர் மக்களையும் இணைக்கும் தன்மை கொண்டதாக இருக்கின்றது
கதிர்காம நடை யாத்திரை உடலுக்கும் உள்ளத்துக்கும் உறுதியும் சாந்தியும் தருவதாக அமைவதாக அதில் ஈடுபட்டவர் கூறியுள்ளனர்.
ஐயப்பன் யாத்திரையை ஆராய்ந்த சமூக வியலாளர் அதனுள் அமைந்திருக்கும் சமத்துவ மனப்பாங்கைச் சிலாகிப்பர்.
கருப்புச் சட்டை போட்டு மாலை போட்டுகொண்டால் அங்கு எல்லாரும் “சாமி” தான் பெயர்கள் என்ற பேதம் கூட மறைந்து விடும். இங்கே கதிர்காம யாத்திரை செல்லும் அனைவ்ரும் சாமிதான் காவி அணிந்து காய்மாலை அணிந்து கொண்டால் அனைவரும் சாமிதான் சின்னச் சாமி பெரிய சாமி என வயது அடிப்படையில் பேதம் இருக்குமே யொழிய அனைவ்ரும் சாமிதான் சாதி என்பதைச் சாமி மேவி விடுகிறது.
சாதி பிரிவினையின் சொல் சாமி சமத்துவத்தின் சொல் அனைவரும் சமத்துவமாக கொண்டு கொடுத்து இணைந்து பிணைந்து கூடிக் குலாவி வாழும் மகிழ்ச்சிகரமான வாழ்வையே மனித குலம் அவாவுறுகிறது.
ஆனால் நடை முறையில் சமூகமும் வாழ்வும் அபப்டியில்லையே எங்கு நோக்கினும் பேதமும் உயர்வு தாழ்வும் ஒருவரை ஒருவர் தாழ்த்துவதும் அல்லவா காணப்படுகின்றன பணம் கொண்டு எதனையும் சாதிக்கும் சமூக அமைப்பல்லவா இது? நடைமுறை அப்படி. நடைமுறை சரிவராத போது மனிர்கள் மனித் சமூகம் எற்றுக் கொள்ளும் வகையில் இன்னொரு நடைமுறையைக் கண்டு பிடிக்கிறாரக்ள் மகிழ்கிறார்கள் மகிழ்ச்சிகரமாக மன நிறைவோடு வாழவே மனிதர் விரும்புகிறாரக்ள்.
இவ்வகையில் மட்டக்களப்பில் வைகாசி மாதத்தில் வருடம் தோறும் நடைபெறும். கண்ணகி அம்மன் சடங்கும் கதிர்காம யாத்திரையும் சமூகவியல் ஆய்வாளர்களின் கவனத்தை ஈர்க்கின்றன.
போராசிரியர் .சி. மௌனகுரு
, மட்டக்களப்பில் வைகாசி மாதத்தில் நடக்கும் கதிர்காம யாத்திரையும் கண்ணகி அம்மன் கோயில் சடங்கும் .