நாட்டின் சனத்தொகை , சுற்றுலா பயணிகளின் வருகை அடிப்படையில் மாத்திரமே புதிய மதுபான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படும் !
நாட்டின் சனத்தொகை மற்றும் சுற்றுலா பயணிகளின் வருகை போன்ற காரணிகளின் அடிப்படையில் மாத்திரமே புதிய மதுபான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
கரவனெல்ல பிரதேசத்தில் நேற்று மாலை இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றின் பின்னர், சதொச நிறுவனத்திற்கு சொந்தமான 100 மதுபான அனுமதிப்பத்திரங்களில் 55 அனுமதிப்பத்திரங்களை அர்ஜுன் அலோசியஸுக்கு சொந்தமான வேறு நிறுவனங்களுக்கு மாற்ற அரசாங்கம் செயற்பட்டு வருவதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து ஊடகவியலாளர்கள் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர் கூறியதாவது ,
மதுபான நிறுவனங்களிடம் இருந்து வசூலிக்கப்படும் வரிகள் இவ்வளவு கவனம் செலுத்தி, முறைபடி வசூலித்த ஒரு காலம் வேறு எங்கும் இல்லை. அத்துடன் குற்றம் சுமத்தப்பட்டது போல், சதொச நிறுவனத்திற்கு சொந்தமான மதுபான அனுமதிப்பத்திரங்களை வழங்குமாறு எமக்கு கோரிக்கை விடுக்கப்படவில்லை. மேலும், இதுபோன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டாலும், மதுபான உரிமத்தை வேறு ஒருவருக்கு குத்தகைக்கு விட முடியாது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆகவே சட்டவிரோத மதுபானம் உற்பத்திச் செய்ததைக் கட்டுப்படுத்துவதும் அரசாங்கத்தின் நோக்கமாகும். மேலும், குறிப்பிட்ட பகுதிக்கு மதுபான உரிமம் வழங்கினால், பிரதேச செயலாளர் மற்றும் பொலிசாரின் கருத்தை கட்டாயம் கேட்க வேண்டும். நியாயமான ஆட்சேபனைகள் எழும் போது எந்த நேரத்திலும் அந்தப் பகுதிகளுக்கு மதுபான உரிமம் வழங்க நடவடிக்கை எடுக்க மாட்டோம்.
2003ம் ஆண்டு மட்டும் வரி விதிப்பால் மதுவின் விலை 108% அதிகரித்துள்ளது. ஒருபோதும் மதுவின் சட்டப்பூர்வ பயன்பாட்டை அரசு அதிகரிக்கப் போவதில்லை. அரசு தனது நண்பர்களுக்கு மதுபான உரிமம் வழங்குவதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை நிராகரிக்கிறோம். தற்போது வரை, நாட்டிலுள்ள மதுபான நிறுவனங்களுக்கு வழங்கப்படும் ஆர்.பி. 04 உரிமம் வெளியிடும் போது முதற்கட்ட கட்டணம் எதுவும் செலுத்தப்படவில்லை என்றாலும், தற்போது ஒன்றரை கோடி ரூபாய் (15 மில்லியன்) கட்டணமாக வசூலிக்கின்றது.
அனைத்து மதுபான அனுமதிப்பத்திரங்களுக்கும் அறவிடப்படும் வருடாந்த கட்டணம் பத்து மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கமைவாக சட்டவிரோத மதுபானத்தின் வளர்ச்சியை குறைப்பதற்கும் சட்டப்பூர்வ மது பாவனையை குறைப்பதற்கும் அரசாங்கம் செயற்பட்டு வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
, நாட்டின் சனத்தொகை , சுற்றுலா பயணிகளின் வருகை அடிப்படையில் மாத்திரமே புதிய மதுபான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படும் !