பிராந்திய செய்திகள்ஏனைய பிராந்திய செய்திகள்

மயக்க மருந்தை கொடுத்து பெண் செய்த செயல்..!!!

மயக்க மருந்தை கொடுத்து பெண் செய்த செயல்..!!! புது வருடத்தை  கொண்டாடுவதற்காக நுவரெலியாவுக்கு அழைத்து வந்த நபரிடமிருந்து  தங்க நகைகள், மற்றும் விலைவுயர்ந்த தொலைபேசி இரண்டை திருடிய  பெண் ஒருவர்  நுவரெலியா  பொலிஸாரால்  திங்கட்கிழமை (26) கைது செய்யப்பட்டுள்ளார் .

குறித்த  பெண்ணிடம் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸாரால் அப்பெண்ணிடமிருந்து  32  இலட்சத்திற்கு அதிக  பெறுமதியான தங்க நகைகள்  , ஸ்மார்ட் தொலைபேசி  ஆகியவற்றை கைப்பற்றியுள்ளனர்.

கைது  செய்யப்பட்ட  பெண்ணும்  கைப்பற்றப்பட்ட  பொருட்களும்    நுவரெலியா, நீதிமன்றத்தில் புதன்கிழமை (28) ஆஜர்படுத்திய  போது மார்ச் மாதம் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்ற நீதிபதி பிரபுதிகா லங்கான்தினி உத்தரவிட்டுள்ளார் .

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

மாலெபே பிரதேசத்தை சேர்ந்த 45 வயது மதிக்கத்தக்க பெண்  கொழும்பை சேர்ந்த செல்வந்தருடன் நட்பை வளர்த்து அவரை 2024 புது வருடத்தை கொண்டாடுவதற்காக  நுவரெலியாவிற்கு  (31.12.2023 ) அழைத்து வந்துள்ளார்.

இவ்வாறு வந்தவர்கள் விடுதி ஒன்றில் தங்கி புது வருட வரவை மகிழ்ச்சியாக அனுபவித்துள்ளனர். இதன் போது குறித்த பெண் அழைத்து வந்த  நபருக்கு உணவு மற்றும் மதுபானத்தில் மயக்க மருந்தை கலந்து கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னர்  அவரிடமிருந்து  32 லட்சத்திற்கு அதிக பெறுமதியான  தங்க நகைகள் மற்றும் விலை உயர்ந்த ஸ்மார்ட் போன்கள் இரண்டை திருடிக்கொண்டு  இப் பெண்  தலை மறைவாகியுள்ளார்.

மறுநாள் மயக்கத்திலிருந்து தெளிந்தவர் பெண்ணையும்,  அத்துடன் தனது பொருட்களையும் தேடி காணாததால்  இது தொடர்பில்  நுவரெலியா பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவில்  முறைப்பாடு  செய்துள்ளார்.

குறித்த முறைப்பாட்டுக்கமைய  பெண்ணின் தொலை பேசி இலக்கத்தை ஆதாரமாக கொண்டு ,  நுவரெலியா பொலிஸார்  மாலபே பகுதிக்கு சென்று இப் பெண்ணை கைது செய்துள்ளனர்.

ஆ.ரமேஸ்

Back to top button