உடும்பன் குளம் படுகொலை : நினைவேந்தலை தடுத்த இராணுவத்தினர்.!!
உடும்பன் குளம் படுகொலை : நினைவேந்தலை தடுத்த இராணுவத்தினர்.!! 19-02-1986 அன்று உடும்பன் குளப்பகுதியில் 120 இற்கும் மேற்பட்ட அப்பாவி தமிழர்களை படுகொலை செய்த 38 ஆவது மறக்க முடியாத நினைவு நாள் இலங்கை தமிழர்கள் வரலாற்றில் கிழக்குமாகாணத்திலேயே சிறீலங்கா இராணுவத்தினால் கொடூராமான முறையில் கூடுதலான இனப்படுகொலைகள் நடந்திருக்கின்றன
இதில் பல தமிழ் இளைஞர்களை சித்திரவதை செய்தும் வெட்டியும் சுட்டும் படுகொலை செய்த அதே வேளை பெண்களை வெட்டியும் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியும் வீடுகளோடு சேர்த்து எரித்தும் கொன்றுள்ளனர். இந்த வகையில் பல ஆயிரக்கணக்கான தமிழ் உறவுகளின் மரண ஓலத்தை கிழக்கு மாகாணம் கண்டிருக்கின்றது.
இவ்வாறு அம்பாறை மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் சிங்கள இராணுவத்தினரின் கொடூரங்களுக்குள் இருந்து தப்ப முடியாமல் போயிற்று இந்த வகையில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள உடும்பன் குளம் என்ற கிராமத்தில் தான் கொடூரமான படுகொலைச் சம்பவம் ஒன்று 1986 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டது.
இப்படுகொலைகள் இடம்பெற்று இன்றுடன் 38 வருடங்கள் நிறைவான நிலையில், படுகொலை செய்யப்பட்டவர்களுக்கான நினைவேந்தல் நிகழ்வு ஒன்று லங்காபையர் ஊடகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
உடும்பன் குளம் பகுதியில் உள்ள கொத்துப்பிள்ளையார் ஆலயத்தில் பூசை நிகழ்வுகள் இடம்பெற்று அங்கு நினைவேந்தல் நிகழ்வு ஆரம்பமாகும் முன்னர் போலீசாரும் இராணுவத்தினரும் புலனாய்வுதுறையுனரின் உதவியுடன் அவ்விடத்திற்கு வந்து தடையினை ஏற்படுத்தியிருந்தனர்.
நீண்டநேர வாக்குவாதங்களுக்கு பிறகு நினைவேந்தல் நிகழ்வானது நேருபுரத்திலுள்ள சத்யசாய்பாபா ஆலய வளாகத்தில் பிற்பகல் இரண்டு முப்பது மணியளவில் நடாத்தப்பட்டது. குறித்த நினைவேந்தல் நிகழ்வில் படுகொலைகளுக்கு ஆளானவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் உட்பட பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
சம்பவத்தை நேரில் பார்த்தவர்களும் சம்பவத்துடன் தொடர்புடைய சாட்சியங்களும் தமது ஆதங்கத்தை தெரிவித்திருந்தமையோடு இறந்தவர்களுக்காக தமது கண்ணீரையும் காணிக்கையாக்கியிருந்தனர்.
குறித்த நிகழ்வில் லங்காபையர் இணையத்தளத்தின் பிரதம ஆசிரியர் பிரகாஸ் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தமது உரையினை ஆற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. பாதிக்கப்பட்டவர்களுக்காக பல ஊடகங்கள் குரல்கொடுத்த போதும் ஒரு ஊடகமே இவ்வாறான ஏற்பாட்டை முன்னின்று நடாத்துவது இதுவே முதல் தடவை எனவும் அங்குள்ள மக்கள் கருத்து தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் வளமான மண்ணில் வளமாக வாழ்ந்த உறவுகள் முத்தியெட்டு வருடங்கள் கழிந்த நிலையிலும் இன்றும் அங்கு சென்று விவசாயம் செய்ய முடியாத நிலைக்கு இப்படுகொலையானது மறக்க முடியாத ரணவலியை ஏற்படுத்தியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.