யாழில் ரயில் விபத்து ; 06 மாத குழந்தை உள்ளிட்ட இருவர் உயிரிழப்பு

யாழில் ரயில் விபத்து ; 06 மாத குழந்தை உள்ளிட்ட இருவர் உயிரிழப்பு யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் ரயிலுடன் வேனொன்று மோதி விபத்துக்குள்ளானதில் குழந்தையும், தந்தையும் உயிரிழந்துள்ளனர்.
குழந்தையின் தாயார் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இணுவில் காரைக்கால் சிவன் கோவிலுக்கு அருகில் நேற்று (14) இரவு குறித்த விபத்து இடம்பெறுள்ளது.
விபத்தில் இணுவில் பகுதியை சேர்ந்த 32 வயதான இளம் தொழிலதிபர் ஆனந்தசயந்தன் மற்றும் அவரது மகளான 6 மாத குழந்தை அப்சரா ஆகியோரே உயிரிழந்துள்ளனர். மனைவி படுகாயமடைந்த நிலையில் , யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவர்கள் ஆலய தரிசனம் முடித்துக்கொண்டு , வீடு திரும்பும் போதே , யாழ்ப்பாண நகர் பகுதியில் இருந்து காங்கேசன்துறை நோக்கி பயணித்த கடுகதி ரயிலுடன் மோதி விபத்துக்கு உள்ளானதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
குறித்த ரயில் கடவையில் காப்பாளர் இல்லாததே விபத்துக்கு காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி , ரயிலை மறித்து போராட்டத்தை முன்னெடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த சுன்னாக பொலிஸார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுக்களை நடாத்தி , ரயிலை விடுவித்தனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளனர்.
யாழ்.விசேட நிருபர்